தஞ்சை பெரிய கோயில் அகழி அருகே உள்ள சுவரை இடிக்கும் பணி தடுத்து நிறுத்தம்

தஞ்சை, நவ. 4: தஞ்சையின் புராதன சின்னமாக விளங்கும் பெரிய கோயில் அகழியையொட்டி உள்ள கோட்டை சுவரை இடிக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோயில் அருகே பெரிய கோயில் கோட்டைக்கு அரணாக விளங்கும் அகழி சுவரை ஒப்பந்ததாரர் மேற்பார்வையில் சிலர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் குருசாமி, சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு ஆகியோர் சென்று விசாரித்தனர்.

அதற்கு “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்துக்காக வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாதுகாக்கப்பட்ட பகுதியான அகழி கோட்டை சுவரை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் அலைபேசியில் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி பொறியாளர் ஆகியோர், “இடித்தது குறித்து தகவல் தெரியாது” என தெரிவித்ததுடன் பணிகளை நிறுத்த உத்தரவிட்டனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் குருசாமி, சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு ஆகியோர் கூறுகையில், “ ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது கோட்டைச்சுவர், அகழி உள்ளிட்ட புராதன சின்னங்களை பாதுகாக்கப்படுமென கலெக்டர், மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்திருந்த நிலையில் அதை மீறி அகழி கோட்டை சுவர் இடிப்பு நடந்துள்ளது.

சுமார் 50 அடிக்கு ஆங்காங்கே சேதப்படுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாற்று அடையாளத்தை பாழ்படுத்தி உள்ளனர். மாநகராட்சி ஆணையர், பொறியாளர் இடித்தது, தங்களுக்கு தெரியாது என்கின்றனர். இதை ஏற்க முடியாது. அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடக்கும். அகழியை பாதுகாக்க போகிறோம் என சொல்லி பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த மக்களை அப்புறப்படுத்தி விட்டு இப்போது அதற்கு மாறாக அகழியையும், கோட்டை சுவரையும் இடிப்பது எந்தவகையிலும் நியாயம் இல்லை. இதுகுறித்து கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

Related Stories: