கூலித்தொழிலாளி கொலையில் 4 பேர் கைது: பழிக்கு பழியாக நடந்தது அம்பலம்

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகர் பாட்டாளி தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அறிவு நிலா(27). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த ஜூன் 5ம் தேதி இதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி பாண்டியன் என்பவரை கொலை செய்த வழக்கில் பாண்டியனும் ஒரு குற்றவாளி ஆவார். இந்த கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பாண்டியன் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், அவர் எதிரிகளுக்கு பயந்து வீட்டில் தங்குவது இல்லை. மேலும், அவர் வேலை செய்யும் இடங்களிலேயே தங்கி இருந்தார். மேலும், அவர் வாரத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து மனைவி அறிவு நிலாவிடம் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், பாண்டியன் பைக்கில் அயப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வந்து அறிவு நிலாவிடம் பணத்தை கொடுத்துள்ளார். பிறகு, பாண்டியன் அங்கிருந்து மீண்டும் பைக்கில் அம்பேத்கர் தெருவில் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த 4 பேர் பாண்டியிடம் தகராறில் ஈடுபட்டு கத்தி, அரிவாளால்அவரை சரமாரியாக வெட்டினர். தப்பியோடிய அவரை அந்த கும்பல் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், பாண்டியன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்த அந்த கும்பல் ஆட்டோவில் ஏறி மீண்டும் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொளப்பாக்கம் அண்ணாநகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சகாதேவன்(31), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(30), அயப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சக்திவேல்(38), அன்னனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த மணிகண்டன்(28) ஆகியோரை நேற்று மாலை கைது செய்தனர். விசாரணையில், மீன் வியாபாரி பாண்டியனின் கொலைக்கு பழிக்குப்பழியாக கூலித்தொழிலாளி பாண்டினை கொலை செய்தது தெரியவந்தது. இதில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரி பாண்டியனின் தம்பி சகாதேவன் மற்றும் அவரது மாமா சக்திவேல் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: