வியாபாரிகளுக்கு எச்சரிக்கை அரிமளம் அருகே 4 வருடங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தலைமறைவான ஆசாமி கேரளாவில் கைது

திருமயம், நவ.3: அரிமளம் அருகே 4 வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆசாமியை நான்கரை வருடங்களுக்கு பின் கேரளா ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள குறிச்சி கிராமம் சுருக்கான்குடி கண்மாய் பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக அப்போது போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இறந்தவர் சென்னை செம்மஞ்சேரி சேர்ந்த பாலு (54) என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளான சென்னையை சேர்ந்த அப்துல்காதர்(43), தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபு(36), மணிகண்டன்(30) மற்றும் உஷா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியான தஞ்சாவூரை சேர்ந்த தங்கராஜ் (45) தலைமறைவாகி மாலத்தீவுக்கு தப்பி ஓடிவிட்டார்.

இதனிடையே பாலு கொலை வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் பாலு, அப்துல்காதர், உஷா ஆகியோர் செக் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக பெங்களூரு, புதுச்சேரி, கடலூரில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அப்துல்காதர், உஷா ஆகியோரை கைது செய்ய சென்னையை சேர்ந்த பாலு போலீஸாருக்கு உதவி செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம்அடைந்த உஷா, அப்துல்காதர் இருவரும் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலுவை கொலை செய்து அரிமளம் அருகே உள்ள கண்மாயில் போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து கே. புதுப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் இறந்தவரின் உடல் சென்னையை சேர்ந்த பாலு என்பதை அவரது குடும்பத்தார் முன்னிலையில் உறுதி செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தங்கராஜ் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிலையில் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் குற்றவாளி) அளிக்கப்பட்டது. இதனிடையே மாலத்தீவில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிற்கு வந்த தங்கராசுவை இந்திய குடியுரிமை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் திருவனந்தபுரம் சென்று தங்கராசுவை கைது செய்து திருமயத்திற்கு கொண்டு வந்த கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: