திருப்பூரில் இரவில் சுற்றித்திரியும் மர்மநபர்கள்

திருப்பூர், அக் 16: திருப்பூர், பெரியார் காலனி பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மர்மநபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரியார் காலனிக்கு சுமார் 100 மீட்டர் தொலைவில் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் உள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள், மனவளக்கலை மன்றம், பூங்கா ஆகியவை உள்ளது.

பெரியார் காலனி பகுதியில் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் நிறுத்துகிறார்கள். இதனை குறிவைத்து, திருடுவதற்காக ஒரு கும்பல் இரவு நேரங்களில் சுற்றித்திரிகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் மாஸ்க் அணிந்து சில மர்மநபர்கள் சுற்றித்திரிந்தனர். மேலும், சில வீடுகளுக்கு முன்பு மலம் கழித்து செல்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பறித்து சென்றார்கள்.

அதிலிருந்து பொதுமக்கள் விழிப்பாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 5 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் ஆட்டோ ஒன்றை சுற்றி சுற்றி வந்தனர். இதனை பார்த்த அப்பகுதியை பெண் ஒருவர் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டதும் மர்மநபர்கள் தாங்கள் வந்த இரு சக்கர வாகனங்களில் பறந்து சென்றனர். மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பலர் வீதிகளுக்குள் சுற்றித் திரிகின்றனர். இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: