சீரான குடிநீர் வழங்க கோரி சிவந்திபுரம் ஊராட்சி முற்றுகை

வி.கே.புரம், அக்.2: சிவந்திபுரம் ஊராட்சியில் சீரான குடிநீர் வழங்க கோரி சிவந்திபுரம் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

சிவந்திபுரம் ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஆகும். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக பாபநாசம், புலவன்பட்டி, ஆலடியூர் போன்ற இடங்களில் தாமிரபரணி ஆற்றின் பகுதியில் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஊராட்சிக்கு உட்பட்ட அம்மா நகர் பகுதியில் குடிநீர் சீராக வழங்கப்படவில்லை எனக்கூறி இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அம்பை பிடிஓ சங்கரகுமார், ஊராட்சி செயலர் வேலு, சுகாதார மேஸ்தி பெல்பின் ஆகியோர் உடனிருந்தனர். அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் ஓரிரு நாளில் அப்பகுதியில் தனியாக பைப்லைன் பிரிக்கப்பட்டு சீரான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: