மக்களின் அடிப்படை வசதிகளை செயல்படுத்த பணம் இல்லையா? திமுக கவுன்சிலர் சரமாரி கேள்வி

பரமக்குடி, செப்.30:  பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகளை செயல்படுத்த பணம் இல்லை என கூறியதால், திமுக கவுன்சிலர்கள் சரமாரியான கேள்விகளை கேட்டனர். பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில், துணைத்தலைவர் சரயூ ராஜேந்திரன் முன்னிலை நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச் செல்வி வரவேற்றார்.  இந்த கூட்டத்தில் விவாதம் வருமாறு:

கலைச்செல்வி (திமுக): பொதுமக்களின் தேவைக்கு திட்டங்களை கேட்டால், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் போதுமான நிதி இல்லை என சொல்கின்றனர். எப்படி திட்டப் பணிகளை நிறைவேற்றுவது. தமிழக அரசு போதுமான நிதியை இந்த யூனியனுக்கு வழங்க வேண்டும்.

சுப்பிரமணியன்(அதிமுக): சரஸ்வதி நகரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் புதுப்பித்து தரவேண்டும். வேந்தோணி மறவர் தெருவுக்குச் செல்லூர் கால்வாயில் பாலம் அமைக்க வேண்டும். நாடக மேடை முன்பு பேவர் பிளாக் அமைத்து தரவேண்டும். குமரகுடி நெசவாளர் காலனியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும். தலைவர்: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நதியா மனோகரன்(திமுக): ஊராட்சி ஒன்றிய நிதியை அதிகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைவர்: பரமக்குடியை ஒன்றியத்தில் முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய  மாவட்ட ஆட்சியர் மற்றும் பரமக்குடி எம்எல்ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் சித்ரா செந்தில், காந்திமதி, சேதுராமன், சிவக்குமார், தேவி உள்ளிட்டோர் பேசினார்கள். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிந்தாமணி முத்தையா பேசியதாவது,” பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடங்களை ஏற்கனவே விவசாய துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு இடம் தேவைப்படுவதால், இனிமேல் யாருக்கும் இடம் வழங்க முடியாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

Related Stories: