கொரோனா பரிசோதனையை 2 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை

ஊட்டி,செப்.29:நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனையை நாளொன்றுக்கு 2 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறுகையில்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமங்களில் பாதிப்பு அதிமாக உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிக தொற்று பதிவாகி வருகிறது. இருப்பினும் அதனை கட்டுபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 1400 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் நிலையில், அதனை 2ஆயிரம் பரிசோதனைகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முக கவசம் அணிகிறார்கள்.

ஆனால் மூக்கு, வாய் ஆகியவற்றை மூடும் வகையில் முக கவசம் அணிவதில்லை. 15 நாட்கள் தொடர்ந்து முக கவசம் அணியும் பட்சத்தில் தொற்று பரவலை கட்டுபடுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முக கவசத்தை பொதுமக்கள் சரியான முறையில் அணிய வேண்டும். இதுதவிர அருகாமையில் உள்ள மாவட்டங்களிலும் தொற்று அதிகம் உள்ளதால், தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தற்போது கடுமையான கால கட்டத்தில் உள்ளதால், கொரோனாவை கட்டுபடுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் வேண்டும். சுற்றுலா பாஸ் அதிகளவு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  இருப்பினும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக உள்ளதால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு ஓட்டல்கள், ரிசார்ட்களில் தங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் தாமதமின்றி வழங்கப்படும்.

டூரிசம் பிரிவில் வாரத்திற்கு 150 இ-பாஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் ஏதேனும் அடையாள அட்டைைய காண்பித்து உள்ளே வரலாம்.

வெளியூர் நபர்கள், நீலகிரிக்கு வர வேண்டும் என்றால் கட்டாயம் இ-பாஸ் தேவை. இ-பாஸ் நடைமுறையில் ஏதேனும் முறைகேடுகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories: