புதிய வறுமைக்கோடு பட்டியல் கம்யூனிஸ்ட் நூதன போராட்டம்

ராமேஸ்வரம், ஆக.22: ராமேஸ்வரம் நகராட்சியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழுபவர்களின் புதிய பட்டியலை தயார் செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ராமேஸ்வரம் நகராட்சியில் பத்தாண்டுகளுக்கு முன்பு தயார் செய்ய வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் பட்டியலே தற்போது அலுவலக நிர்வாக நடைமுறையில் உள்ளது. இந்த பட்டியலில் வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர் பெயர்கள் இருப்பதாக புகார் உள்ளது. இவர்கள் அரசின் சலுகைகளை பெற்று வந்தனர். ஏழை எளியவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

எனவே உண்மையில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை அடையாளம் கண்டு புதிய பெயர் பட்டியலை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தயாரிக்க வலியறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதையொட்டி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில் உடம்பில் மேல் சட்டை அணியாமல் வயிற்றில் வறுமைக்கோடு என்று எழுதிய கட்சியினர் நகராட்சி அலுவலகம் வந்தனர். கமிஷனர் ராமுவிடம், ஏழை மக்களின் நலன் கருதி புதிய வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலை தயார் செய்ய வலியுறுத்தி மனு கொடுத்தனர். ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் செந்தில்வேல், தாலுகா பொருளாளர் ரமணி, மண்டபம் ஒன்றிய துணைச்சேர்மன் ஆரோக்கியநாதன், திருவாசகம், தனவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: