தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உணவு பாதுகாப்புத்துறையில் ஒரு வியாபாரிக்கு இனி ஒரே எப்எஸ்எஸ்ஏஐ நம்பர் தரமற்ற உணவுபொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை

வேலூர், மார்ச் 18: தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி உணவு பாதுகாப்புத்துறையில் ஒரு செல்போன் நம்பருக்கு, ஒரே லைசென்ஸ் என்ற முறை கொண்டுவரப்பட உள்ளது. தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் சாலையோரக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், சிக்கன் பக்கோடா கடைகள், மளிகை கடைகள், நட்சத்திர ஓட்டல்கள் என்று அனைத்து வகையான உணவு சார்ந்த விற்பனை நிலையங்கள் உணவுபாதுகாப்புத்துறைக்கான சான்றினை கட்டாயம் பெற வேண்டும். அதோடு உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் சான்று பெறாதவர்கள், தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் அதிகபட்ச விதிமீறல்களுக்கு உரிமமும் ரத்து செய்து வருகின்றனர். ஆனாலும் சில வியாபாரிகள் உணவுப்பாதுகாப்புத்துறையின் மற்றொரு உரிமம் பெற்று தொடர்ந்து தரமற்ற, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் உணவுப்பாதுகாப்புத்துறையில் உள்ள குறையும் காரணமாக உள்ளது. வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் எப்எஸ்எஸ்ஏஐ நம்பர் பெறாவிட்டால் அபராதம் செலுத்தி அதே எண்ணை பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லாமல் இருந்தது. இதனால் மீண்டும் புதிதாக விண்ணப்பித்து எப்எஸ்எஸ்ஏஐ நம்பர் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, வியாபாரிகள் சிலர் தரமற்ற போலி உணவுப்பொருட்களை தாராளமாக விற்பனை செய்து, உணவுபாதுகாப்புத்துறையினரிடம் சிக்கினால் அதற்கு அபராதம் செலுத்திவிட்டு, மீண்டும் வேறு எப்எஸ்எஸ்ஏஐ நம்பரை பெற்றுக்கொள்கின்றனர். இதனால் போலி உணவுப்பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள், புதிய வியாபாரியாக சந்தைக்குள் நுழைந்துவிடுகின்றனர். இதனை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை உரிமம் வழங்குவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உணவுப்பாதுகாப்புத்துறை மூலம் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனையை தடுக்க ஒரு வியாபாரிக்கு ஒரே எப்எஸ்எஸ்ஏஐ நம்பர் மட்டுமே இனி வழங்கப்படும். காலாவதியானால் கட்டாயம் அபராதம் செலுத்தி அதே எண்ணைத்தான் மீண்டும் பெறவேண்டும். இதன்மூலம் போலி மற்றும் தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்பவர்களை எளிதாக கண்டறிந்துவிடலாம். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>