2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக வாட்ஸ் அப்'பில் பொய்யான தகவல் பரப்பிய 3 வாலிபர்கள் கைது குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம், மார்ச் 18: குடியாத்தத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் பரப்பிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இதனால் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கங்களும் மூடப்பட்டு, எந்தவித நிகழ்ச்சியும் நடத்த கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், இதனை குடியாத்தம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதி செய்ததாக, தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதைபோல் சித்தரித்து 2 இளைஞர்களின் புகைப்படத்துடன் வீடியோ தயாரித்து, வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் சிலர் ஷேர் செய்துள்ளனர்.

இதுகுறித்து குடியாத்தம் டிஎஸ்பி சரவணன் உத்தரவின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் பரப்பியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், குடியாத்தம், நெல்லூர்பேட்டையை சேர்ந்த தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் விஜி(19), ராஜாகோவில் கிராமத்தை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி சுகுமார்(20), செதுக்கரையை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார்(22) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>