தாவரவியல் பூங்கா மூடல் சாலை, கடை வீதி வெறிச்சோடியது

ஊட்டி, மார்ச் 18: ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மூடப்பட்ட நிலையில், எப்போதும் பிசியாக இருக்கும் பூங்கா சாலை மற்றும் கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்லாமல், ஊர் திரும்பமாட்டார்கள்.

இதனால், எப்போதுமே இந்த பூங்காவில் மக்கள் கூட்டம் காணப்படும். குறிப்பாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை வெயில் சமயத்தில் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகமாக காணப்படும்.

இப்பூங்கா செல்லும் சாலையோரங்கள் மற்றும் கடை வீதிகளில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும்.இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று பிற்பகல் முதல் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. குறிப்பாக, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால், எப்போதும் பிசியாக மக்கள் கூட்டத்துடன் காட்சியளிக்கும் ஊட்டி அரசு தாவரவியல் சாலை மற்றும் கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டன. அங்குள்ள சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைவான பயணிகளுடன் இயங்கும் மலை ரயில்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நூற்றாண்டு பழமையான மலை ரயில் இயக்கப்படுகிறது.

இதில் பயணம் செய்ய உள்நாடு, வெளி நாடு சுற்றுலா பயணிகள் ஆர்வம் செலுத்துவர். தற்போது, மலை ரயில் கட்டணத்தை தென்னக ரயில்வே துறை இரு மடங்காக  உயர்த்தியுள்ளது. இதற்கு முன் குன்னூர் ஊட்டி இடையே 35 ரூபாய் வசூலித்து வந்த கட்டணம் தற்போது 80 ரூபாயாகவும்,  முதல் வகுப்பிற்கான கட்டணம் 185 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் பயணித்து வந்த உள்ளூர் வாசிகள் பயணம் மேற்கொள்வதை நிறுத்தியுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் எதிரொலியாக, சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. இதனால், நேற்று   ஏழு பயணிகளுடன்  ரயில் இயங்கியது.  இதனால் ரயில்வே துறைக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: