பழங்குடியின கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

குன்னூர், மார்ச் 18: நீலகிரி மாவட்டம் உலிக்கல் பஞ்சாயத்தில் செங்கல்புதூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 50 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளை தொட்டில் கட்டி வனப்பகுதிகள் வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று வந்தனர். முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் அவ்வாறு அழைத்து செல்லும் போது வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் தாக்குதலுக்கும் உள்ளாகினர். இதனால் பழங்குடியின மக்கள் அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதன் பின்னர் கடந்த 2018ம் ஆண்டு ட்ரூக் முதல் செங்கல்புதூர் வரை சாலை அமைக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் பின்னர் சாலை பணிகளுக்காக பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சாலை வெட்டப்பட்டது. பிறகு இந்த பணிகள் நிறைவடையாமல் விளம்பர பலகைகள் மட்டும் வைத்துவிட்டு சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் இன்று வரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: