கொரோனா வைரஸ் எதிரொலி லைசென்ஸ் வழங்கும் பணி நிறுத்தம்

கோவை, மார்ச்18:  கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் முகாமிட்டு கோவைக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும் கோவை உக்கடத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவை புரூக் பாண்ட் சாலை, சத்தி சாலையில் உள்ள வணிக வளாகங்கள் மூடப்பட்டன. அங்கு அதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

கோவை மாவட்டத்தில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்கள், 1,094 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் கோவை மண்டல போக்குவரத்து துறையின் சார்பில் நேற்று அனைத்து அலுவலகங்களிலும் அலுவலகத்திற்கு உள்ளே வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வரும் 31ம் தேதி வரை புதிதாக பழகுனர் உரிமம், லைசென்சு வழங்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி கோவை சரக போக்குவரத்து துறையில்  கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கோவை தெற்கு, வடக்கு, மையம், மேற்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், பொள்ளாச்சி, ஊட்டி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், சூலூர், அவினாசி, காங்கயம், வால்பாறை, மேட்டுப்பாளையம், கூடலூர், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதிதாக பழகுனர் உரிமம், லைசென்சு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வட்டார போக்குவரத்து அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினிகளை கொண்டு தூய்மைப்பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மார்ச் 31ம் தேதி வரையில் மறு உத்தரவு வரும் வரை புதிதாக பழகுனர் உரிமம் மற்றும் லைசென்சு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த உத்தரவு அனைத்து அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Related Stories: