திருப்போரூர், மார்ச் 12: ஓஎம்ஆர் புறவழி சாலை பணிகள் நடப்பதால், அருகில் உள்ள காலவாக்கம் கிராம மக்கள் மயானத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜிவ்காந்தி சாலை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 6 வழிப்பாதையாக உள்ளது. இதையடுத்து சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை 4 வழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் படூர், கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.படூர் - தையூர் இடையே ஒரு புறவழிச் சாலையும், திருப்போரூர் - ஆலத்தூர் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. படூர் - தையூர் இடையே புறவழிச்சாலை 4.67 கி.மீ தூரத்துக்கு அமைகிறது. திருப்போரூர் - ஆலத்தூர் இடையே புறவழிச் சாலை 7.45 கி.மீ தூரத்திற்கு போடப்படுகிறது. 2 புறவழிச் சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் ₹465 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து இந்த சாலை அமைக்க படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி உள்பட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக படூர், கேளம்பாக்கம், தையூர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த கட்டமாக திருப்போரூர் - ஆலத்தூர் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.