காஞ்சிபுரம், ஆக.1: உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் முனிரத்தினம் வெற்றி பெற்ற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், விவி பேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரி பார்க்க வேண்டும் என்று திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட க.சுந்தர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார்.
தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் 10 வாக்குப்பதிவு இயந்திரங்களையும், விவி பேட் இயந்திரங்களையும் சரிபார்ப்பும் பணி கலெக்டர் சினேகா தலைமையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. கடைசி நாளான நேற்று 10வது வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி பார்த்தபோது வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேட் இயந்திரம் பழுதானது தெரிய வந்தது.
திமுக வேட்பாளர் க.சுந்தரின் சொந்த ஊர் சாலவாக்கம் பகுதி வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் திமுகவினர் இடையே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும், திமுக தலைமைக்கும் தெரிவித்து உரிய சட்ட நடவடிக்கைக மேற்கொள்ள உள்ளதாக திமுக வேட்பாளர் க.சுந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
