செங்கல்பட்டு, ஜூலை 31: பொத்தேரி சர்வீஸ் சாலையின் இரு புறமும் அமைக்கப்பட்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி பகுதியில் சர்வீஸ் சாலை உள்ளது. இங்கு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பொத்தேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதற்கு போலீசார் விரைவில் அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொத்தேரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மறைமலைநகர் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் முன்னி லையில் மறைமலைநகர் நகராட்சியை சேர்ந்த ஊழியர்கள் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
