கொரோனா வைரஸ் ஓட்டல் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

திருப்பூர், மார்ச் 12: திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், ‘கொரோனா வைரஸ்’ தொற்று தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணி, தங்கவேல், சதீஸ், ேகசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஓட்டல் உரிமையாளர்கள் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பேசியதாவது: மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய பொதுவான இடங்கள் ஓட்டல், லாட்ஜ், வணிக வளாகங்கள் ஆகும். ஆகவே, உணவகங்களில் மேஜைகள், இருக்கைகள், தரைப்பகுதி, கை கழுவும் குழாய்கள், கழிவறைகள், கதவு கைப்பிடிகள் அனைத்தையும் அடிக்கடி சோப், வேதி பொருட்களை கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 2 மணி நேர இடைவெளிக்கு ஒருமுறை அனைத்து பகுதிகளும் சுத்தப்படுத்த வேண்டும். கைகழுவும் பகுதியில், கை கழுவ பயன்படுத்தும் சோப்பு வேதிகரைசல் வைத்திருக்க வேண்டும். கை கழுவும் முறைகள் குறித்து ேநாட்டீஸ் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

பணியாளர் தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டையை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். கழிவறையை பயன்படுத்திய பின்பு, கைகளை நன்றாக கழுவிய பிறகே பணியாற்ற வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை நன்கு கொதிக்க வைத்து சுடுநீரை வழங்க வேண்டும். பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்டுத்தக்கூடாது. உரிமம், பதிவுச்சான்று உடனுக்குடன் புதுப்பித்து கொள்ள வேண்டும். உரிமம், பதிவு சான்றினை அனைவரின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் நபர்கள் பற்றிய விபரங்களை உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பணியாளர்கள் கையுறை, முககவசம் அணிந்திருக்க வேண்டும். பயன்படுத்திய டம்ளர், தட்டுகள் ஆகியவற்றை சுடு தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.  இனிப்பு தயாரிப்பாளர்கள், தயாரிப்பு தேதி மற்றும் பயன்படுத்தும் கால அளவு கொண்ட விபரங்களை அதில் ஒட்டியிருக்க வேண்டும். செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகளை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து 7 நிலைகளை கொண்ட கைகழுவும் முறைகள் செய்து காட்டப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories: