தமிழக காவல்துறையில் கைரேகை பிரிவு மூலம் தேசிய அளவிலான குற்றவாளிகளை பிடிக்க ‘என்ஏஎப்ஐஎஸ்’ சிஸ்டம் விரைவில் அறிமுகம் உபகரணங்கள் மாவட்டங்கள் தோறும் அனுப்பி வைப்பு

வேலூர், மார்ச் 10:தமிழக காவல்துறையில் கைரேகை பிரிவு மூலம் தேசிய அளவிலான குற்றவாளிகளை பிடிக்க ‘என்ஏஎப்ஐஎஸ்’ சிஸ்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான உபகரணங்கள் மாவட்டங்கள் தோறும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.தமிழக காவல்துறையில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, தனிப்பிரிவு, கலால் பிரிவு, போக்குவரத்து பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இந்த பிரிவுகளில் மிக முக்கிய போலீஸ் பிரிவாக கைரேகை பிரிவு உள்ளது.தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதும் கொலையாளிகளின் முகம், உருவம் கண்காணிப்பு கேமராக்களில் பதியவில்லையென்றால், முதலில் போலீசார் நாடுவது கைரேகை பிரிவைத்தான். கைரேகை பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளை சேகரித்துக்கொண்டு, அதனை ஏற்கனவே உள்ள பழைய குற்றவாளிகளின் பட்டியலுடன் இணைத்து சோதனையிடுவார்கள்.

இதில் தமிழக காவல்துறையில், தமிழகத்தில் உள்ள குற்றவாளிகளின் பட்டியல் மட்டுமே கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலக்கொள்ளையர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களது கைரேகைகள் மட்டுமே இருக்கும். ஆனால் புதிதாக வடமாநிலக்கொள்ளையர்கள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களது விவரங்களை தமிழகத்தில் உள்ள கைரேகை பிரிவில் கண்டறிய முடியாது.எனவே தமிழக காவல்துறையில் நாடுமுழுவதும் உள்ள குற்றவாளிகளின் விவரங்களை கண்டறியும் விதமாக, ‘என்ஏஎப்ஐஎஸ்’ என்ற நேஷ்னல் ஆட்டோமெட்டட் பிங்கர் பிரிண்ட் இன்வெஸ்டிகேஷன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், தமிழகத்தில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைரேகை வைத்து உடனடியாக கண்டறிய முடியும். இதன்மூலம் குற்றவாளிகளை கண்டறிய இனி கைரேகை பதிவுகளை தேடி வடமாநிலங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான பணிகள் தமிழக காவல்துறையில் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக காவல்துறையில் கைரேகை பிரிவு மூலம் நாடுமுழுவதும் உள்ள குற்றவாளிகளை கண்டறிய ‘என்ஏஎப்ஐஎஸ்’ என்ற சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு தேவையான பிரிண்டர், ஸ்கேனர் போன்ற உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், தமிழகத்தில் கைவரிசை காட்டும் வடமாநில கொள்ளையர்களின் விவரங்களை தமிழகத்தில் இருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்’ என்றனர்.

Related Stories: