மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு ஊழியர்களுக்கான தடகள போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர் அருணா வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது. அதேபோல், இந்த ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை 7ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற  உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு ஊழியர்கள் தங்கள் நுழைவு படிவத்தினை துறை அலுவலர் ஒப்புதலுடன் அன்றைய நாளில் காலை 8 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலரிடம்  சமர்ப்பிக்கலாம்.இதில் தடகளம் ஆண்கள் 100 மீ, 200 மீ, 800 மீ, 1,500 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீ தொடர் ஓட்டம் போட்டிகளும், அதேபோல் பெண்களுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, நீளம்  தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீ தடை தாண்டும் ஓட்டம் போட்டிகளும் நடைபெற உள்ளது.

அதேபோல், இறகு பந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபாடி, மேசைப்பந்து, கையுந்து பந்து ஆகிய போட்டிகளில் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிகளில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பங்கேற்கலாம்.

மேலும், மாவட்ட அளவிலான குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த அணிகள் மற்றும் தடகள போட்டிகளில் முதல் இடம் பெறுவோர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்வதற்கு தகுதியுடையவர். மாநில அளவிலான  போட்டிகளுக்கு செல்லும் அணிகளுக்கு சீருடை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: