மண்ணச்சநல்லூர், மார்ச் 4: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியை சேர்ந்த அதிமுக பிரமுகரின் மளிகை கடையில் முகமூடி அணிந்து இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிக்குண்டை வீசி விட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம்(48). இவர் அதிமுக எம்ஜிஆர் மன்ற மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் திருப்பைஞ்சீலி கடைவீதியில் கோயில் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சோமசுந்தரம் மற்றும் அவரது மனைவி புஷ்பா ஆகிய இருவரும் மளிகை கடையில் வியாபாரம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது இரவு 7.30 மணியளவில் 2 பைக்குகளில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் திடீரென்று கடைக்குள் நாட்டு வெடிக்குண்டை வீசிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். மர்ம ஆசாமிகள் வீசிய நாட்டு வெடிகுண்டு கடை முன்பு இருந்த ஷோகேசில்பட்டு வெடித்தில் ஷோகேஸ் சேதமடைந்தது. இதில் சோமசுந்தரத்தின் மனைவி புஷ்பா காயமடைந்தார்.
