தாளவாடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

சத்தியமங்கலம், மார்ச் 2:  சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் வேத விற்பன்னர்கள் யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று மதியம் யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து கோயில் கோபுரத்தில் உள்ள விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக விழாவை காண வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்கள் 30 பேர் சீதனமாக அம்மனுக்கு சேலை, தேங்காய், பழம், இனிப்பு ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினர். அதே போல, கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாத்தை வாங்கி சாப்பிட்டனர். பாரம்பரியமாக நடந்த சம்பிரதாயம் முறையை தற்போது பின்பற்றுவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். கருவறையில் உள்ள அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில் தாளவாடி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராம மக்களும், கர்நாடக மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: