வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள்

ஈரோடு, மே 30: ஈரோடு தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் இன்று மாலைக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகின்ற 4ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 84 மேசைகளில் 17 முதல் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இதனிடையே, வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை, தடையற்ற மின்சாரம், தடுப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், உணவு விநியோகம், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கான அறைகள், செய்தியாளர்களுக்கான மீடியா சென்டர், இணையதள வசதி, ஒலி பெருக்கி வசதி, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று 30ம் தேதி மாலைக்குள் அனைத்து பணிகளையும் முடித்து தயார் நிலையில் வைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: