வீட்டு அருகில் விளையாடியபோது குழந்தையிடம் செயின் பறிப்பு

ஆவடி, பிப். 28: ஆவடி கோயில்பதாகை, பூங்கொடி நகரை சேர்ந்தவர் அருள்முருகன் (33). இவரும், மனைவியும் ஆவடி டேங்க் பேக்டரியில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஹரிபிரியா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் குழந்தையை அருகில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு இருவரும் வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு சவரன் செயின் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக, அருள்முருகன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தினர்.  அதில் செயினை பறித்தவர்கள் திருவள்ளூர் வெங்கல் கிராமத்தை சேர்ந்த நந்தா (42), அவரது கூட்டாளியான ஆவடி பக்தவத்சலபுரத்தை சேர்ந்த ரமேஷ் (42) என்ற ஆட்டோ டிரைவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான இருவரையும் நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அருள்முருகன் வீட்டு அருகில் உள்ள ஒரு வீட்டில் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் வந்த நந்தாவும், ரமேஷும் குழந்தையை நைசாக பேசி தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். பினன்ர் நந்தா வெங்கலில் உள்ள அடகு கடையில் செயினை கொடுத்து ஏற்கனவே அடகு வைத்திருந்த மனைவியின் கம்மல், மூக்குத்தியை மீட்டதும் தெரிய வந்தது. பின்னர் நந்தா கொடுத்த தகவலின்பேரில் கடையில் அடகு வைத்திருந்த தங்க செயினை போலீசார் மீட்டனர். பின்னர், இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: