கிராம மக்கள் உண்ணாவிரதம் எதிரொலி தோகைமலை வடசேரியி்ல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

தோகைமலை, பிப். 28: தோகைமலை அருகே வடசேரியி–்ல் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி வடசேரியில் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வடசேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். சமூக ஆர்வலர்கள் பெரியசாமி, லோகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் சுதாமுத்துக்குமார், சூர்யஜனாத், கண்ணன், பிச்சைமுத்து, தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தகவல் அறிந்த குளித்தலை தாசில்தார் ரெத்தினவேல், ஆர;ஐ நீதிராஜன், விஏஓ அண்ணாத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணை தலைவர் பாலாமணி தங்கராசு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் வந்து வடசேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, வடசேரியில் இருந்து புழுதேரி வேளாண் அறிவியல் மையம், சீத்தப்பட்டி வழியாக திருச்சி பகுதிக்கு முக்கிய சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக வடசேரி ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இதனால் திருச்சி பகுதிக்கும், மணப்பாறை பகுதிக்கும் 2 அரசு பேருந்துகள் சென்று வந்தது. இந்நிலையில் இந்த சாலை பழுதானதை ஒட்டி கடந்த ஆண்டு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் புழுதேரி இணைப்பு சாலை முதல் வடசேரி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.இதில் புதிய தார்சாலைக்கான பணிகள் 90 சதவீத பணிகள் முடிவுற்றது. ஆனால் வடசேரியில் உள்ள திருச்சி சாலையில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் சாலைகுறுகலாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் நிலையிலும் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், புதிய தார்சாலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தார் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினோம். இதன்பிறகு புதிய தார்சாலைக்கான பணிகள் முழுமை பெறாமல் பாதியில் நின்றுவிட்டதால் கடந்த 15 மாதங்களாக 2 அரசு பேருந்துகளையும் நிறுத்தியதன் விளைவாக பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.

ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், டிஆர்ஓ, ஆர்டிஓ, தாசில்தார், ஒன்றிய ஆணையர் என்று அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை நேரில் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் முற்றுகை போராட்டம் நடந்தப்படும் என்று அறிவித்து இருந்தோம். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் தோகைமலை ஒன்றிய நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள் என ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். அப்போது இருந்த மாவட்ட திட்ட இயக்ககுனர் கவிதா நேரில் பார்வையிட்டு 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தவிட்டார். அதன்பிறகு இதுவரை எந்த பயனும் இல்லை. மீண்டும் கடந்த வாரம் கலெக்டரை நேரில் பார்த்து முறையிட்டோம். அப்போது 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு 13 நாட்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை என்பதால் தற்போது அனுமதி பெற்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.

இதை கேட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளது. நேரில் பார்வையிட்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தனர். இதன்பின்னர் பொதுமக்களில் ஒருவர் பார்வையிட்ட பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் ஆஸ்பெஸ்டாஸ், டீ கடை போன்றவற்றை அகற்றவில்லை என்று தெரிவித்தனர்.இதையடுத்து நாளைக்குள்(29ம் தேதி) ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படும் என்று ஒப்புதல் கடிதம் மூலம் ஊராட்சி தலைவர் உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவுற்றது.

Related Stories: