பூண்டி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் வீட்டில் திருடிய ரோடு கான்ட்ராக்டர் கைது: 33 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர், பிப்.27:  பூண்டி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வீட்டின் பின்பக்க  கதவை உடைத்து திருடியவரை கைது செய்து, அவரிடமிருந்து 33 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.28 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் அடுத்த பூண்டியை சேர்ந்தவர் விஜி (39). பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர்.  இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு , பக்கத்து தெருவில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  குடும்பத்துடன் சென்றுள்ளார். பிறகு அவரது மனைவி வீட்டுற்கு திரும்பியுள்ளார். அப்போது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை, ரொக்கப் பணம், வெள்ளிப் பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில் திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் பூண்டி அருகே நெய்வேலி சத்யாநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன்(49) என்பவர்,  விஜி வீட்டுக்குள் புகுந்த நகை மற்றும் பணத்தை திருடியதும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் விஜியிடமே ரோடு காண்ட்ராக்ட் வேலையில் ஈடுபட்டுவந்ததும் தெரிய வந்தது.

 இதையடுத்து நெய்வேலி அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்.  விசாரணையில் கார்பெண்டர் தொழில் செய்து வந்ததும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 33 சவரன் நகை, ரூ.28,500 ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: