திருச்சி ஆவின் சேர்மன் பதவி பறிப்பு

திருச்சி,பிப்.20: திருச்சி ஆவின் சேர்மன் பதவி பறிப்பு பின்னணி குறித்த பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது. கடந்தாண்டு தமிழகம் முழுவதும் ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய சேர்மன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி ஆவின் சேர்மனாக முன்னாள் கவுன்சிலரும், திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது திருச்சி அதிமுக நிர்வாகிகள், கார்த்திகேயன் மீது பல்வேறு புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் அடுக்கினர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 14 ஆவின் கலைக்கப்பட்டு சேர்மன்கள் பதவிகள் நேற்று பறிக்கப்பட்டது.அதில் குறிப்பாக திருச்சி ஆவின் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, புதிய ஆவின் சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் பிப்.27ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி ஆவின் சேர்மன் பதவி பறிப்பு பின்னணி குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது: முதல்வரின் பெயரை பயன்படுத்தி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்கள் சென்றதால், கார்த்திகேயனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டித்ததாகவும், அவரது பதவிப்பறிப்புக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

Related Stories: