மீஞ்சூர் அருகே சமூகவிரோதிகளின் புகலிடமான கல்லறை தோட்டம்

பொன்னேரி, பிப். 20:  சமூக விரோதிகளின் புகலிடமான சுடுகாடு, கல்லறை தோட்டம், மையவாடி ஆகியவற்றுக்கு சுற்றுச்சுவர், தண்ணீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்பவடை செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்துக்களுக்கு சுடுகாடு, கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம், முஸ்லிம்களுக்கு மையவாடி தனித்தனியாக உள்ளது. அரியன்வாயல் கிராமத்தில் யாராவது இறந்தால், அவரது சடலத்தை அவர்களது மத சடங்குகள் படி எரிக்கவோ அல்லது அடக்கம் செய்யப்படுகிறது.  சுடுகாடு, கல்லறைதோட்டம், மையவாடிக்கு சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி உள்பட எந்த அடிப்படை வசதிகளுக்கு செய்யப்பட வில்லை என தெரிகிறது. இதனால் சுடுகாட்டுக்கு சடலங்களை இரவு நேரத்தில் எடுத்து வருபவர்கள் மின் விளக்கு இல்லாததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

 மேலும், கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. போதிய பராமரிப்பு இல்லாததால் முட்செடிகள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இரவு நேரத்தில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துவதற்கு திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அப்பகுதியினர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.  எனவே, அரியன்வாயல் கிராமத்தில் உள்ள சுடுகாடு, கல்லறைதோட்டம்,  மையவாடி ஆகியவற்றுக்கு சுற்றுசுவர், தண்ணீர், மின்விளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர்  ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: