திண்டுக்கல், பழநியில் காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு

>பழநி, பிப். 19: காஸ் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல், பழநியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக காஸ் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். காஸ் விலையை குறைக்க வேண்டும். காஸ் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்தும் பழநியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ்நிலைய ரவுண்டானா அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவசக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகர தலைவர் முத்துவிஜயன், வட்டார தலைவர்கள் சுந்தரம், ராஜேந்திரன், பேரூர் தலைவர்கள் பெரியதுரை, லோகநாதன், சின்னக்காளை, முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர்கள் பத்மினி முருகானந்தம், சுரேஷ், நாகராஜன், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழரசி ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழநிதிண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு முன்னாள் மாநில தலைவர் முகம்மது சித்திக் முன்னிலை வகித்தார். மாநகர மாவட்ட துணை செயலாளர்கள் ஷாஜகான், அபீப் வரவேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நசீர், மனித உரிமை துறை தலைவர் ராஜேந்திரகுமார், மண்டல தலைவர் தனபால், மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜாபேகம், இளைஞர் காங்கிரஸ் மாநகர மாவட்ட பொது செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: