விருதுநகர், பிப்.18: தமிழகத்தில் 9 ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பதாக எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் எம்பியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மோடி-அமித்ஷா அரசு ரயில்வே திட்டங்களில் தனியார் துறையையும் அதே நேரத்தில் தமிழக திட்டங்களுக்கான ஒதுக்கி உள்ள நிதி ஒதுக்கீட்டை பார்த்தாலே தெரிகிறது. தமிழகத்தின் 10 இருவழிப்பாதை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.2 கோடியே 70லட்சத்து 10ஆயிரம் ஒதுக்கி உள்ளனர். இதில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி 17 கி.மீ ரூ.2 கோடியே 70 லட்சம், மீதமுள்ள ரூ.10ஆயிரத்தை மதுரை - தூத்துக்குடி(வழி அருப்புக்கோட்டை) 143 கி.மீ, திண்டிவனம்-செஞ்சி(70கி.மீ), திண்டிவனம்-நகரி(179கி.மீ), அத்திபட்டு-புத்தூர்(88.3கி.மீ), ஈரோடு-பழநி(91.05கி.மீ), சென்னை-கடலூர்(179கி.மீ), பெரும்புதூர்-கூடுவாஞ்சேரி(60கி.மீ), மொரப்பூர்-தர்மபுரி(36கி.மீ), பெங்களுர்-சத்தியமங்கலம்(260கி.மீ) ஆகிய 9 திட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளனர். இதை வைத்து பேப்பர், பேனா கூட வாங்க முடியாது.