மழையின்மையால் வறண்டு கிடக்கும் நிலங்கள் தீவனத் தட்டுப்பாட்டால் ஆடுகளின் விலை அதிகரிப்பு

தேவாரம், பிப்.17: தேனி மாவட்டத்தில் மழையின்மையால் நிலங்கள் வறண்டு ஆடுகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆடு வளர்ப்போர் தீவனங்களை விலைக்கு வாங்குவதால், ஆடுகளை அதிக விலைக்கு விற்கின்றனர். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, போடி, சின்னமனூர், கம்பம் ஆகிய ஊர்களை சுற்றி, விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. இதில் விவசாயம் செய்யும் விவசாயிகள் உபதொழிலாக உள்ள ஆடு, மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆடுகளை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதற்காக வெள்ளாடு, செம்மறி ஆடுகள் அதிகமாக வாங்கப்படுகின்றன. உத்தமபாளையம், கம்பம், போடி, ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விற்பனைக்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகளை தீவனத்திற்காக தோட்டங்கள், காடுகள், வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு விடுவர்.

ஆடுகள் அதிக விலைக்கு விற்பனை:இந்நிலையில், மாவட்டத்தில் மழை இல்லாததால், நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. ஆடுகளுக்கு தீவனங்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் ஆடுகளை அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால், தேனி மாவட்டத்தை சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர்கள் மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு சென்று ஆடுகளை வாங்கி வருகின்றனர். ஆடுவளர்ப்பவர்கள் கூறுகையில்,தேனி மாவட்டத்தில் இன்னும் 4 மாதங்களுக்கு மழை இருக்காது. ஆடுகளை மேய்ப்பதில் சிரமம் ஏற்படும். இதனால், அவைகளின் தீவனத்திற்காககீரைகள் உள்ளிட்ட உணவுகளை வாங்குகிறோம். எனவே, ஆடுகளை அதிக விலை வைத்து விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: