மாநகராட்சி குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், பிப். 13:  குடிநீர், சொத்துவரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட 60 வார்டுகளிளும் சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படாமல் உள்ளது. வரியை வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள், சொத்து வரி, வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகையை எளிதில் செலுத்தும் வகையில், மாநகராட்சி பிரதான அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் வசதி ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரை முதல் தவணை, அக்டோபரில் இருந்து மார்ச் வரை இரண்டாவது தவணை வரி செலுத்த வேண்டும். தற்போது, இரண்டாவது தவணை காலம் முடிய ஒன்றரை மாதமே உள்ள நிலையில், பல கோடி ரூபாய் வரியினங்கள் பொது மக்கள் செலுத்தாமல் உள்ளனர். இதையடுத்து, வரி செலுத்தாதவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஆண்டுக் கணக்கில் வரி செலுத்தாமல் உள்ளவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை 60 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் வரி என கோடிக்கணக்கில் வரிபாக்கி நிலுவையில் உள்ளது. 100 சதவீதம் வரிவசூல் செய்வதில் தற்போது அதிகாரிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளனர். வரிபாக்கி அதிகம் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் வரி வசூல் மையம் செயல்படுகிறது. வரி பாக்கிகளை செலுத்தாதவர்கள் உடனே அதை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

Related Stories: