குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது

பொள்ளாச்சி,பிப்.13: பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.  பொள்ளாச்சியை அடுத்த  குரங்கு அருவி,டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா பகுதிக்கு, கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.  இதில் ஆழியாருக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாபயணிகள், குரங்கு அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மழை இருக்கும் காலக்கட்டத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வரும்போது, சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.   ஆனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையில்லாததால் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குறைந்தது.

தற்போது தண்ணீர் குறைந்து பெரும்பாலா பகுதி வெறும் பாறையாக உள்ளது. இதனால், குரங்கு அருவியில் தண்ணீர் பெருமளவு இல்லாததையறிந்து அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர்.  இதில் நேற்று, குரங்கு அருவிக்கு சில சுற்றுலா பயணிகளே வந்தனர். இருப்பினும் அருவியில் ஒரு பகுதியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவால், அவர்கள் சிறிதளவு கொட்டிய தண்ணீரில் குளித்து சென்ற அவலம் ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்த நிலையடைவதாகவும், இந்த நிலை இன்னும் சில வாரமே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: