நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அம்மா உணவகங்களில் பாலகம்

சென்னை, பிப். 7: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இவைகளில் காலை நேரங்களில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், கலவை சாதம் உள்ளிட்ட பல வகை சாதங்களும், இரவில் சப்பாத்தி உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ₹468 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களை லாபத்தில் இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு சார்பில் சென்னையில் உள்ள அனைத்து உணவங்களிலும் 15 நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி அம்மா உணவகத்தை மேம்படுத்துவது தொடர்பாக 5 திட்டங்களை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மா உணவகத்தை மேம்படுத்த நிதி திரட்டுவது தொடர்பாக தனி அறக்கட்டளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவங்களை மேம்படுத்த நிதி திரட்ட அறக்கட்டளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு பல்வேறு அமைப்புகள் நிதி அளிக்கலாம். இந்த நிதி மூலம் அம்மா உணவகத்திற்கு தேவையான செலவுகள் செய்யப்படும். இதைத்தவிர்த்து ஒருகிணைந்த உணவு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அம்மா உணவங்களுக்கு தேவையான உணவு ஒருங்கிணைந்த உணவு கூட்டத்தில் உணவு தயாரிக்கப்பட்டு உணவங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: