ஏற்கனவே ரூ.12.74 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.2.93 கோடி கூடுதல் நிதியுடன் திருத்தணி புதிய பேருந்துநிலைய உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம்: ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

திருத்தணி: திருத்தணியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.2.93 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதியுடன் 6 மாதங்களாக தடைப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரி மாதம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலா நகரமாக சிறப்பு பெற்ற திருத்தணிக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், திருப்பதி, சித்தூர், பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதனால், திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நின்று செல்லவும், போதுமான வசதிகளும் இல்லாத நிலையில், போக்குவரத்து நெரிசலால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைய பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை நிறைவேற்றும் வகையில், அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் 4.60 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைய இடம் தேர்வு செய்யப்பட்டது.

திமுக ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2021ல் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சர் நேரு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். கடந்த ஒன்றரை ஆண்டாக துரித வேகத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், நிதி பற்றாகுறையால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலைய கட்டுமான பணிகள்
புதிய பேருந்து நிலைய கட்டிடப் பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில், தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.2.93 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 6 மாதங்களாக தடைபப்ட்ட பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நகராட்சி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் மேற்பார்வையில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதிய பேருந்து நிலையத்தில் முருகன் கோயில் கோபுரம் வடிவில் நுழைவுவாயில் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தரைத்தளம் அமைத்தல், டைல்ஸ் ஒட்டும் பணிகள், பைப்லைன் அமைக்கும் பணிகள் உட்பட உட்கட்டமைப்பு பணிகள் துரித வேகத்தில் மேற்கொண்டு வருவதால், ஜனவரி மாதம் முதல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருத்தணி நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது.

* அமைய உள்ள வசதிகள்
புதிய பேருந்து நிலையத்தில் திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 4 பேருந்துகள் உட்பட 28 பேருந்துகள் நிற்கும் வகையில் ஸ்டாண்டுகள் அமைந்துள்ளன. 24 கடை ரூம்கள், பயணிகள் தங்கும் அறைகள், குளியல் அறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வு அறைகள், ஏடிஎம் மையம், காவலர் அறை, உட்பட அதிநவீன வசதிகள் நிறைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளதாக நகராட்சி ஆணையர் அருள் தெரிவித்தார்.

The post ஏற்கனவே ரூ.12.74 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.2.93 கோடி கூடுதல் நிதியுடன் திருத்தணி புதிய பேருந்துநிலைய உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம்: ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: