போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல் திருப்பத்தூர் நகரில் கனரக வாகனங்கள், ஆட்டோக்கள் நுழைய தடை

* கலெக்டர் அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர், பிப்.4: திருப்பத்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல் கனரக வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நகர் பகுதிக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வந்தது. ஆசிரியர் நகர் பகுதியில் இருந்து புதுப்பேட்டைரோடு வரை பொதுமக்கள் செல்ல மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

சாலைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு மற்றும் கனரக வாகனங்கள் நகரப் பகுதிக்குள் வந்து அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாரை சாரையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் இருந்தபோது நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று அப்போதைய கலெக்டர் உத்தரவிட்டு அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மீண்டும் நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் படையெடுக்கத் தொடங்கியது.

இதனால் மாவட்டம் ஆகிய பின்பும் பஸ் நிலையத்திலிருந்து ஹவுசிங் போர்டு வரை போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்து, பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் திருப்பத்தூர் நகர மக்கள் மற்றும் வணிகர்கள் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர் அதன்பேரில். கடந்த 16ம் தேதி நடந்த சட்டம், ஒழுங்கு கூட்டத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர், எஸ்பி விஜயகுமார் மற்றும் கலெக்டர் சிவன் அருள் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  தற்போது திருப்பத்தூர் நகருக்குள் வரும் 5ம் தேதி ( நாளை) முதல் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 3.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நகரப் பகுதிக்குள் நுழையக்கூடாது. வெளியூர் செல்லும் கனரக வாகனங்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல், நகருக்கு இயங்கும் ஆட்டோக்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்த வேண்டும்.

மேலும், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம், கொரட்டி மற்றும் பிற பகுதியில் இருந்து வரும் ஆட்டோக்கள் அனைத்தும் திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலை வழியாக தனியார் தியேட்டர் எதிரேயுள்ள சாலை வழியாக புதுப்பேட்டை சாலையை அடைந்து அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும். அதேபோல, புதுப்பேட்டையில் இருந்து வரும் ஆட்டோக்கள் அனைத்தும் எம்ஜிஆர் சிலை வழியாக திரும்பி ஆரிசெட்டி தெருவை அடைந்து ரயில்வே ஸ்டேஷன் சாலை வழியாக திரும்பி பெரியகுளமேடு வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட வேண்டும். அங்கிருந்து பொதுமக்களை ஏற்றிக்கொண்டு அதே வழித்தடத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் பயன்படுத்தி புதுப்பேட்டை ரோடு பகுதிக்கு செல்ல வேண்டும்.

ஆட்டோக்கள் எளிதாக சென்று வர அந்த சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை முதல் ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் செல்ல கட்டாயம் அனுமதியில்லை.  அதேபோல, ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் பஸ்நிலையம் எதிரே உள்ள சினிமா தியேட்டர் அருகே பயணிகளை இறக்கிவிட்டு, அதே இடத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பிச்செல்ல வேண்டும்.

திருப்பத்தூர் நகர் பகுதிக்குள் நுழையும் ஆட்டோக்கள், புதுப்பேட்டை ரோடு முதல் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தம் வரை ஆட்டோக்களை நிறுத்த அனுமதியில்லை.

அனைத்து ஆட்டோக்களை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கலாம். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். கலெக்டரின் இந்த திடீர் அறிவிப்பால் திருப்பத்தூர் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: