சாணாரப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

சேலம், ஜன.30: சாணாரப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று(30ம் தேதி) நடக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மல்லிகுந்தம் கிராமம் பள்ளக்காட்டில் உள்ள சாராணப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று மதியம் யந்திர ஸ்தாபனம், ரத்தின ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புன்யாகவாசனத்துடன் 5ம் கால யாகபூஜை துவங்கியது.

இன்று(30ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு மங்கள இசை, அபிஷேகம், விக்னேஷ்வரபூஜை, பஞ்சகாவ்யம் மற்றும் 6ம் கால யாகபூஜை ஆரம்பம், நாடி சந்தானம், விசேசதியாஹூதி வழிபாடும், காலை 8.30 மணிக்கு மகாபூர்ணாஹூதி, உபச்சாரம், யாத்ராதானம், தசதானம் மற்றும் பிரதான கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் சக்தி மாரியம்மன், மங்கல கணபதி, வேணுகோபாலசுவாமி மற்றும் பரிவாரம், விமானம், மூலாலயம் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.

காடையாம்பட்டி அருகே லாரி மோதி விபத்து தொழிலாளி பலி

காடையாம்பட்டி, ஜன.30: காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவர், பண்ணப்பட்டி பிரிவு பகுதியில் சுமார் 10 ஆண்டுகளாக பஞ்சர் கடை நடத்தி வருகிறார். அவருடன் இரண்டு மகன்களும் பஞ்சர் ஒட்டும் பணியை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கார் ஒன்று பஞ்சராகி நின்றது. இதுகுறித்த தகவலின்பேரில், முகமது அலியின் மகன் அசின்(23) சம்பவ இடத்திற்கு சென்று காருக்கு பஞ்சர் போட்டு விட்டு திரும்பியுள்ளார்.

 அப்போது, சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி மோதியது. இதில், பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த அசின் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: