ஊரக புத்தாக்க திட்டம் அமைச்சர் துவக்கி வைத்தார்

உடுமலை,ஜன.28: உடுமலையில்  நேற்று முன்தினம் தமிழக ஊரக புத்தாக்க திட்டம் துவக்க விழா நடந்தது.   கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில், அமைச்சர் ராதாகிருஷ்ணன்  திட்டத்தை துவக்கிவைத்து பேசியதாவது:

கிராம ஊரக சமுதாயத்தில் வறுமை  ஒழிப்பு என்னும் செயல்பாட்டை தாண்டி, தொழில்மேம்பாடு மூலம் வளத்தையும்,  அதன் நிலைத்த தன்மையையும் உருவாக்கி ஊரக பகுதிகளில் பெரும் மாற்றத்தையும்,  வளர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்  துவக்கப்பட்டுள்ளது.உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி திட்டம்  மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த  திட்டமாகும். தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம், ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும்  தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ஆகியவற்றின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு  முதலீடுகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் மூலதனங்களை அடிப்படையாக கொண்டு  இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வட்டாரங்களில் ஊரகத் தொழில் முனைவுகளை உருவாக்குவதல், நிதிச் சேவைகளுக்கு  வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின்  முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டம் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 120  வட்டாரங்களில் செயல்படுத்தப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை,  அவிநாசி, திருப்பூர், பொங்கலூர், குண்டடம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள 122  ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து இதற்கான கையேட்டை அமைச்சர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: