கிராமசபை கூட்டத்தில் உறவினர்களின் குறுக்கீடு இல்லாமல் ஊராட்சி பெண் தலைவர்கள் பேச வேண்டும்

திருவள்ளூர், ஜன. 24:  திருவள்ளூர் உட்பட தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் பிரதிநிதிகளின் பதவியிடங்கள் காலியாக இருந்தன. அக்கால கட்டத்தில் சிறப்பு அலுவலர்கள் மூலம் கிராமசபை கூட்டங்கள்  நடந்தது. உள்ளூர் பிரச்னைகளின் முக்கியத்துவம் அலுவலருக்கு தெரியாததால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள்  பதவியேற்றுள்ளனர். இத்தேர்தலில் 50 சதவீத பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஊராட்சிகளில் பெண் தலைவர்களே உள்ளனர். இந்த ஊராட்சிகளில் குடியரசு தினமான ஜன.26 ம் தேதி, முதல் கிராம சபை  கூட்டம் நடக்க உள்ளது. வழக்கமாக பெண் தலைவர்கள் போர்வையில் அவர்களது கணவர், உறவினர்களே ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு இருக்கும்.

இது பெண்களுக்கான இட ஒதுக்கீடு தத்துவத்தையே கேள்விக்குறியாக்கி வந்தது.

ஊராட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ரப்பர் ஸ்டாம்பை போல பல பெண் தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்து சென்றனர். கிராமசபை கூட்டங்கள் மற்றும் மன்ற கூட்டங்களில் தலைவர் மட்டுமே பதிலளிக்க வேண்டும்,  உறவினர்கள் பதிலளிக்கக்கூடாது. குறிப்பாக மன்ற கூட்டங்களில் உறவினர்கள் பங்கேற்கவே கூடாது. இதை முறையாக அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள்  கூறுகையில், ‘’வரும் ஜன., 26 கிராம சபை கூட்டத்தில் மக்களின் கேள்விகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல் பெண் தலைவர்களே பதிலளிப்பதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். அப்போது தான் ஊராட்சி நிர்வாகமும்,  பெண் தலைவர்களின் அதிகார சுதந்திரமும் காக்கப்படும்  என்றனர்.

Related Stories: