சாணார்பட்டி அருகே திட்டம் செயல்படுத்தி 3 ஆண்டாகியும் வராத காவிரி குடிநீர் மறியல் போராட்டம் அறிவிப்பால் பரபரப்பு

கோபால்பட்டி, ஜன. 23: சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் திட்டம் செயல்படுத்தி 3 ஆண்டாகியும் காவிரி குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாணார்பட்டி அருஙக வேம்பார்பட்டி பஞ்சாயத்தில் கோபால்பட்டி, வேம்பார்பட்டி, விளக்குகோடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பஞ்சாயத்து நிர்வாகம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இப்பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாததால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் குறைய துவங்கி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை தீர்க்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.

ஆனால் இன்று வரை வேம்பார்பட்டி கிராமங்களுக்கு காவிரி தண்ணீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தினந்தோறும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தேவையை சமாளிக்க ஒரு குடம் குடிநீர் ரூ.5க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீரை வழங்க கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘போர்வெல்லில் தண்ணீர் வற்றியதால் காவிரி குடிநீர் திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தனர். ஆனால் இதுவரை தண்ணீர் வந்தபாடில்லை. குடிநீர் தேடி பல கிமீ அலைவதுடன் ஒரு குடம் ரூ.5க்கு வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த அவலநிலையை போக்க உடனே காவிரி தண்ணீர் வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட வேண்டியதிருக்கும்’ என்றனர்.

Related Stories: