பெரப்பன்சோலை கிராமத்தில் பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்

நாமகிரிப்பேட்டை, ஜன.23: நாமகிரிப்பேட்டை அடுத்த பெரப்பன்சோலை கிராமத்தில், நேற்று அட்மா திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் பயிரில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இந்த பயிற்சி வகுப்பில் வேளாண்மை இணை இயக்குநர் சேகர் கலந்து கொண்டு, வேளாண் துறை சார்ந்த அரசின் பல்வேறு திட்டங்களை பற்றியும், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற துணை வேளாண்மை அலுவலர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு, விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு, மதிய உணவு, மற்றும் இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது. பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பிற்கு வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீதரன், உழவன் செயலியின் பயன்பாடு, பயன்படுத்தும் முறைகள், அதன் பயன்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தியாகராஜன், விக்னேஸ்வரன்.  ஆகியோர் செய்திருந்தனர். துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.

Related Stories: