குளிக்கும் இடத்தில் மீன் பிடிக்க எதிர்ப்பு மெக்கானிக்கை தாக்கியவர் மீது வழக்கு

நாங்குநேரி, ஜன. 23:  மூலைக்கரைப்பட்டி அருகே குளிக்கும் இடத்தில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த மெக்கானிக் தாக்கப்பட்டார். மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு செல்வம் நகரை சேர்ந்த நடேசன் மகன் முத்துவேல் (21). இவர் மூலைக்கரைப்பட்டியில் டூவிலர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று முத்துவேல் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோர் அங்குள்ள ஓடையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுருளை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் வேலாயுதம் என்பவர், ஓடையில் மீன் பிடித்ததாக தெரிகிறது. அப்போது குளிக்கும் இடத்தில் மீன்பிடிக்காதீர்கள், சற்று தள்ளி சென்று மீன் பிடிக்குமாறு வேலாயுதத்திடம் முத்துவேல் கூறினார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.  ஆத்திரம் அடைந்த வேலாயுதம், முத்துவேலை அவதூறாக பேசி தாக்கினார். காயம் அடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள வேலாயுதத்தை தேடி வருகிறார்.

Related Stories: