சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.4.85 கோடி

சுரண்டை, ஜன.23:   சுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு ரூ.4.85 கோடி ஒதுக்க நடவடிக்கை எடுத்த தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நன்றி கூறினர்.

 தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் (என்ஏஏசி) பெறும் வகைக்காக 10 கல்லூரிகளுக்கு ரூ.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுமென  சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவித்தார்.   அதன்படி சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 3.97 கோடியும், மர தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க ரூ.88 லட்சம் என மொத்தம் 4.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும், சுரண்டை - ஆனைகுளம் ரோட்டிலிருந்து கல்லூரி வரை செல்லும் ரோட்டை சீரமைக்க சுரண்டை பேரூராட்சிக்கு பொதுப்பணித்துறை தடையின்மை சான்று வழங்கியுள்ளதாகவும் தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கூறினார்.  கல்லூரி வளர்ச்சிக்கு தொடர்ந்து அதிகமாக நிதி ஒதுக்க முயற்சி செய்த செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயா தலைமையில் பேராசிரியர்கள் பீர்கான், பரமார்த்தலிங்கம், வீரபத்திரன், முத்துராமலிங்கம், செல்வகணபதி, நாராயணன், பழனி செல்வம், ஜேபஸ், மாரிபாண்டி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Related Stories: