கொடைக்கானல் வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை

கொடைக்கானல், ஜன. 22: கொடைக்கானல் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவல் குறித்து நக்சலைட் தடுப்பு, அதிரடிப்படை பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கொடைக்கானல் வடகவுஞ்சி மலைப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட்டுகள் ஊடுருவி பயிற்சி செய்தனர். அப்போது நக்சலைட்டுகள், போலீசாருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு நக்சலைட் சுட்டு கொல்லப்பட்டான். தப்பியோடிய மற்றவர்கள் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பின் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் வட்டக்கானலை அடுத்துள்ள வெள்ளகெவி மலைக்கிராம வனப்பகுதியில் அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மலைக்கிராமங்களில் நக்சலைட்டுகள் பொதுமக்கள் போல் ஊடுருவி உள்ளனரா, விவசாய வேலைகளுக்கு வருவதுபோல் வேற்று மொழி பேசுபவர்கள், சந்தேகப்படும் வகையில் யாரேனும் உள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தினர். சோதனைக்கு பின் போலீசார் கூறியதாவது, ‘இது வழக்கமான சோதனை நடவடிக்கைதான். தற்போது வட்டக்கானல், வெள்ளக்கெவி, கும்பக்கரை பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடரும்’ என்றனர்.

Related Stories: