பள்ளி பரிமாற்ற திட்டத்தின்கீழ் அரணாரை பள்ளி மாணவர்கள் பெரம்பலூர் பள்ளிக்கு வருகை

பெரம்பலூர், ஜன. 22: அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் பள்ளி பரிமாற்ற திட்டத்தின்கீழ் பெரம்பலூர் பள்ளிக்கு வந்தனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டபள்ளிகளில் பள்ளி பரிமாற்று திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 நகர்ப்புற பள்ளிகள் மற்றும் 9 கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் நகர்புறம் கிராமப்புறம் மாறி சென்று கலந்து கொண்டு அவரவர் சூழல் குறித்து அறிந்து கொள்கின்றனர். இதில் முதல்கட்டமாக நகர்புற பள்ளிகளின் கட்டமைப்பு, நகர்ப்புற பள்ளி மாணவிகளின் பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள், ஆசிரியர்களின் கற்பித்தல் உத்திகள், நெறிமுறைகள் சுற்றுச்சூழல், திறமைகள் களப்பயணம் செல்லுதல் போன்ற பல்வேறுபட்ட செயல்பாடு குறித்து மாணவ மாணவியர் நேரில் அறிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டது.

இதன்படி பெரம்பலூர் சாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் நேற்று பள்ளி பரிமாற்று திட்டத்தின்கீழ் நேரில் வந்து கலந்து கொண்டனர். இதில் பள்ளி தலைமையாசிரியை பிரமிளா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி ஆகியோர் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் மாசிதுரை, கல்பனா ஆகியோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின்கீழ் நேற்று ஒரே நாளில் 18 பள்ளிகளை சேர்ந்த 360 மாணவ மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர். இதேபோல் வருகிற 24ம் தேதி நகர்ப்புற மாணவ, மாணவியர் கிராமப்புற பள்ளிகளுக்கு நேரில் சென்று கிராமப்புற மாணவ மாணவியரின் கல்வித்திறன், சுற்றுச்சூழல், இயற்கை வளம், பள்ளிக்கு செல்லும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட கிராமப்புற மாணவர்கள் கல்வி பயிலும் முறைகள் குறித்து நேரில் அறிந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: