வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தேனி, ஜன.14: வைகை அணையில் போகி பண்டிகையன்று சுற்றுலா விழா இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக வைகை அணை விளங்குகிறது. கடந்த 2017ம் ஆண்டு போகிப்பண்டிகையன்று, பொங்கல் திருநாளை வரவேற்கும் வகையில், சுற்றுலாத் துறை மூலம் அணை பகுதியில் பொங்கல் சுற்றுலா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின்போது, வைகை அணை பூங்காவில் செங்கரும்பு, மஞ்சள்கொத்து, மா இலை தோரணம் கட்டி பொங்கல் படைக்கப்பட்டது. விழாவையொட்டி கரகாட்டம், காவடி ஆட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் நடத்தப்பட்டது. இதனை வைகை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக போகிப்பண்டிகையன்று விழா நடத்தப்படவில்லை. இவ்வாண்டாவது போகிப்பண்டிகையின்போது, சுற்றுலா விழா கொண்டாடப்படும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்வாண்டும் சுற்றுலா விழா நடத்தாதது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

Related Stories: