வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து வியாபாரி வீட்டில் நுழைந்து 3 லட்சம், 10 சவரன் நூதன கொள்ளை

சென்னை, ஜன.14:  வியாபாரி வீட்டில் அதிரடியாக நுழைந்த மர்ம நபர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, ₹3 லட்சம், 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், பல்லவன் நகர், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முகமது நூருல்லா (65). பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டிற்கு கார் ஒன்று வந்தது. அதில், 2 பேர் சபாரி உடையும், 2 பேர் போலீஸ் சீருடையிலும் இருந்தனர்.

இவர்கள், அதிரடியாக நூருல்லா வீட்டிற்குள் நுழைந்து, அடையாள அட்டையை காண்பித்து, ‘‘நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். நீங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும்,’’ என்றனர்.

பின்னர், வீட்டில் இருந்த அனைத்து செல்போன்களையும் வாங்கி “சுவிட்ச் ஆப்” செய்தனர். தொடர்ந்து, வீடு முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி, பீரோவில் இருந்த ₹3.10 லட்சம், 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். ‘‘இந்த நகை, பணத்துக்கான ஆவணங்களை கொண்டு வந்து, வருமான வரித்துறை அலுவலகத்தில் காண்பித்து, கையெழுத்து போட்டு பெற்று கொள்ளுங்கள்,’’ என கூறிவிட்டு அங்கிருந்து அவசர, அவசரமாக கிளம்பினர்.

அவர்களின் செயலில் சந்தேகமடைந்த முகமது நூருல்லா, ‘‘வருமான வரித்துறை அலுவலகம் வந்து யாரிடம் கேட்க வேண்டும்,’’ என்று அவர்களிடம் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், அவர்களை மடக்கி பிடித்தபோது, போலீஸ் உடையில் இருந்த 2 பேர், நூருல்லாவை சரமாரியாக தாக்கினர். ஆனாலும், அவர்களை விடாமல் பிடித்துக்கொண்டு, கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால், அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பியது. அப்போதுதான் வந்தவர்கள் போலி அதிகாரிகள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து முகமது நூருல்லா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 4 பேர் கும்பல் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு, அவசர அவசரமாக காரில் ஏறி தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த காட்சிகளை போல், மர்ம நபர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Related Stories: