கல்லக்குடி பேரூராட்சியில் முப்பெரும் பொங்கல் விழா

லால்குடி, ஜன.14: கல்லக்குடி பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல், சுகாதார பொங்கல், சமத்துவ பொங்கல் என முப்பெரும் விழா தூய சவேரியார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் கலா தலைமை வகித்தார். முன்னதாக பேரூராட்சி முழுவதும் சுகாதார பணியாளர்கள் போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்கள், துணிமணிகள், இயற்கைக்கு எதிரான பொருட்களை பொதுமக்கள் எரிக்ககூடாது என்றும், அதனால் ஏற்படும் சுகாதார தீமைகள் குறித்து வீடுவீடாக துண்டுபிரசுரம், ஒலிப்பெருக்கியுடன் கூடிய வாகனம் மூலம் கூறி சேகரித்தனர், இதனையடுத்து புகையில்லா பொங்கல் கொண்டாடுவதற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுகாதார பொங்கல் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கவிதை, கட்டுரை மற்றும் கோலப்போட்டி, பேச்சுபோட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு செயல் அலுவலர் சாகுல்அமீது பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். மேலும் விழாவில் ஒரு மாணவனின் பிறந்தநாளையொட்டி சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கி பின்னர் அந்த மாணவர் சாக்லேட் பிளாஸ்டிக் பேப்பர் சேகரம் செய்வதை கண்டு மாணவரை செயல்அலுவலர் சாகுல்அமீது பாராட்டி பரிசு வழங்கி அனைத்து மாணவர்களும் இதுபோல் பிளாஸ்டிக்பொருட்களை சேகரியுங்கள். அதற்கு உரிய பரிசுகளை நாங்கள் தருகிறோம் என மாணவ, மாணவிகளிடம் ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. முன்னதாக பேரூராட்சி வரிதண்டலர் செல்வமணி வரவேற்று பேசினார். பொது சுகாதார மேற்பார்வையாளர் சொக்கர் நன்றி கூறினார்.

Related Stories: