ஊட்டி அரசு கலை கல்லூரியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு

ஊட்டி, ஜன.13: ஊட்டி அரசு கலை கல்லூரியில் நேற்று நடந்த உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் 469 பேர் தேர்வு எழுதினார்கள். 210 பேர் எழுதவில்லை.தமிழக காவல்துறையில் ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்ற 969 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு கலை கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்விற்காக மாவட்டத்தில் 679 பேருக்கு அனுமதி சீட்டு அனுப்பட்டிருந்தது. இதில் 469 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். 210 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வினை கோவை சரக டிஐஜி., கார்த்திகேயன், நீலகிரி எஸ்பி., சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் வண்ணம் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச் உள்ளிட்டவைகளும் தடை செய்யப்பட்டது. தேர்வை முன்னிட்டு அரசு கலை கல்லூரியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று துறை சார்ந்த பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

Related Stories: