தலைவாசல் அருகே டிராக்டரில் கற்கள் கடத்தியவர் கைது

ஆத்தூர், ஜன.9:  தலைவாசல் அருகே வசிஷ்ட நதிக்கரையிலிருந்து கற்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். தலைவாசல் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் பகுதியில், வசிஷ்ட நதி அருகே வீடு கட்ட பயன்படுத்தப்படும் கற்கள் அதிகளவில் உள்ளன. இந்த கற்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் கடத்தி சென்று  விற்பனை செய்வதாக, ஆத்தூர் தாசில்தார் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கோவிந்தம்பாளையம், சித்தேரி பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சித்தேரி பகுதியில் வந்த டிராக்டரை கிராம நிர்வாக அலுவலர் உஷா உள்ளிட்ட பணியாளர்கள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் கற்கள் கடத்தப்பட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தலைவாசல் போலீசார், கற்களை ஏற்றி வந்த டிராக்டர் டிரைவர் முத்தழகை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் வசிஷ்ட நதி கரையோரம் இருந்த கற்களை எடுத்து விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் உஷா கொடுத்த புகாரின் பேரில், முத்தழகை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: