டெல்லி நேரு பல்கலையில் வன்முறை துணைவேந்தரை கைது செய்ய வேண்டும்

தஞ்சை, ஜன. 8: தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியினர் கடந்த 5ம் தேதி இரவு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டம், மோடி அரசு இந்தியாவின் ஹிட்லர் பாசிச ஆட்சியை நிலைநிறுத்தும் வேலையில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் அயிசேகோஷை தேடி பிடித்து தாக்கியுள்ளனர்.அந்த மாணவியின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்துத்துவா அரசியலை ஏற்காத பேராசிரியர்களையும் தேடி தேடி தாக்கியுள்ளனர். காவல்துறையினர் குவிந்திருந்த வாயில் வழியாக தான் முகமூடி வன்முறை கும்பல் சாவகாசமாக வெளியேறியுள்ளது.

உத்தரபிரதேசம் மீரட்டில் காவல்துறையினர் அப்பாவிகள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போனபோது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து அனுப்பினர். உ.பி.யில் பாஜகவின் யோகி ஆதித்தியநாத் ஆட்சி நடக்கிறது. மோகன்பகவத், மோடி அரசின் இந்துத்துவா கலக திட்டம் ஒரே பாணியில் இருப்பதை நேரு பல்கலைக்கழக தாக்குதலும் அடையாளம் காட்டுகிறது. நேரு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களை படுகாயப்படுத்தி தப்பித்த வன்முறை கும்பலில் உள்ள அனைவரையும் கைது செய்யவும், தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தரையும் கைது செய்து பதவிநீக்கம் செய்யவும், வன்முறை சதியில் பங்கு கொண்ட, துணை நின்ற அனைவரையும் சிறையில் அடைக்கவும், ஒருங்கிணைந்த மக்கள் எழுச்சி அனைத்திந்திய அளவில் தேவைப்படுகிறது. பாஜகவினர் தமிழகத்தில் அதே பாணி இந்துத்துவா கலகங்களை நடத்தினால் தடுக்க தமிழக மக்கள் கட்சி வேறுபாடின்றி விழிப்பாய் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: